திருமாலை(பாகம்-1) 1-11

தொண்டரடிப்பொடி ஆழ்வாரின் "திருமாலை அறியாதார் 

திருமாலை அறியாதார்"!


பூமாலை சூட்டி பாமாலை பாடப் பிறந்தவர்! இதிலுள்ள 44 பாக்களும் அந்த அரங்கனைப் பற்றியது. அரங்கனைப்பற்றியதென்றால் அவனை முன் வைத்து ஆழ்வார் நம்முடன் நின்று கொண்டு ...சாட்டையைச் சுழற்றுகிறார்...அடி சற்று பலம் தான் என்றாலும் உணர்வதென்னவோ இனிமை மட்டுமே ! "கண்ணன் அல்லால் தெய்வமில்லை" என்று ஆணித்தரமாக ஒவ்வொரு பாடலிலும் எடுத்துரைக்கிறார்! நமக்கு அவனின் நாமத்தின் வலிமை... நம்முடைய தவறுகள்... பாவங்கள்... அதனால் வரும் விளைவுகள்...அதனைக் கடக்க நாம் என்ன செய்ய வேண்டுமென்றும் தெள்ளத்தெளிவாக நமக்கு எடுத்து உரைக்கிறார்

 1 ஆம் பாடல்

ஆழ்வாரின் முதல் பாடலே

நம்மை எழுப்பி நிமிர்ந்து அமரச் செய்கிறது! பாடல் மேலதாளத்துடன் மகிழ்ச்சி பெருக்குடன் துவங்கிறது!

அவன்...அந்த மாயனின்...இந்த மூவூலகும் உண்டு உமிழ்ந்தவனின்...அந்த அரங்கனின் நாமம் சொல்வதால் ஏற்படும் "கர்வம்"(ஆவலிப்பு)என்னவெல்லாம் செய்தது தெரியுமா? மரணபயம் போய் விட்டது!

காவல் இல்லாமல் (காவலில்) புலன் சென்ற போக்கில் சென்று...அதனால் ஏற்பட்ட தீயவற்றை யெல்லாம் நொடிப் பொழுதில் கடக்கும் மாயம் அந்த திருநாமத்தை சொல்வதனால் ஏற்ப்பட்டது!

உன் "நாமவலிமை" கொடுத்த செருக்கால்...ஆனந்தத்தால் பயமனைத்தும் மறைந்து எமதூதுவரின் தலை மேலேஆடித் திரிகின்றோம்! எமபடர்களும் அதை உவந்து ஏற்கின்றனர்

2 ஆம் பாடல்

அடுத்து வரும் பாடல் ...ஆஹா... அருமை! ஆழ்வார் அரங்கனைப்பார்த்து உரைக்கிறார் இவ்வாறாக...இங்கே பாரும் ஓய்! நீர் எனக்கு இந்திரலோகத்தை...பரமபதத்தைக் கொடுத்தாலும் அது எனக்கு வேண்டாம்...ஏன் தெரியுமா?

பச்சை மாமலை(அவன் கரியவன்..பின் ஏன் ஆழ்வார் பச்சை என்றுரைக்கிறார்...அவர் பார்த்ததை உரைக்கவில்லை...உணர்ந்தததை உரைக்கிறார்...அரங்கனின் திருமேனி அழகைக் கண்டதும் கண்கள் குளிர்ச்சி காண்கின்றன...

குளிர்ச்சிக்குரிய நிறம் பச்சை ஆதலால் ) போன்ற உன் திருமேனி...பவளத்தை ஒத்த உன் "திரு வதரம்" "தாமரைக்கண்கள்"..அச்சுதா! அமரர்களுக்குத்தலைவனே...ஆயர்குடிகளுடன்ஒருவனாய் இருந்தவனே! இந்த அறுசுவை களையும் (நாமத்தின்)சுவைப்பதை விட்டு விட்டு பரமபதத்தையே அளித்தாலும் வேண்டவே வேண்டாம்!

3 ஆம் பாடல்

அப்படியானால்...உமக்கு சம்சாரவாழ்க்கை வேண்டுமோ? என்று எம்பிரான் வினவ.. வேண்டாம் வேண்டாம் வேதம் கூறியபடி மனிதருக்கு ஆயுள் 100 ஆண்டுகள் ஆனாலும் பாதி வருடம் உறங்கிப்போவோம்!மீதி பதினையாண்டு(10*5=50)குழந்தையாக...இளமைப்பருவமாக..பசி...பிணி...மூப்பு போன்ற துன்பங்களாலும் கழியும் ... ஆதலால் பிறவியும் வேண்டாம்...

பிறகு என்னதான் ஓய் உமக்கு வேண்டும்? அரங்கன் கேட்க...இந்த மாமதிள் சூழ் திருவரங்கத்தில் இருந்து கொண்டு உன்னை.. உன்...நாமத்தை நினைத்துருக வேண்டும் என்கிறார்!

இப்போது வரை ஆழ்வார் அவரைப்பற்றி கூறிக்கொண்டு இருக்க...

இப்போது சாட்டையை நம்பக்கம் சுழற்றுகிறார்...

4 ஆம் பாடல்

மிகுந்தகொடியவனான...நீசனான..கத்திரபந்துவும்..."கோவிந்தா" என்று உன் திருநாமத்தைச் சொல்லி தன் பாவங்கள் அனைத்திலிருந்தும் விடுபட்டு பராங்கதி (பரமபதம்) பெற்ற விட்டான்... அப்படி அடியார்க்கு இரங்கும் அரங்கன் எனும் பித்தன் (வேறு எந்த ஆழ்வாரும் "பித்தன்" எனும் பதத்தை பிரபந்தத்தில் உபயோகிக்கவில்லை)இருக்க நாம் ஏன் துன்பத்தில் அகப்பட்டு வருந்த வேண்டும்?

 5 ஆம் பாடல்

குளிர்ந்த துளசி மாலை அணிந்த அரங்கனை நினைந்து ஆடிப்பாடி தொண்டு செய்து ஆன்மாவிற்கு அமிழ்துண்ணாமல்... புலன்களுக்கு தீனி போட்டு அழிந்து போகும் உடலுக்கே கரைந்து நைந்து கொண்டு இருக்கிறோம்!

6 ஆம் பாடல்

அடுத்த அடி  சற்று பலம் தான்...ஆனால் உண்மை தெள்ளத்தெளிவாக உணர முடிகிறது!  தர்மமே சுவராகி நிற்கும் அரங்கனுக்கு அடிமை செய்து...ஆத்மாவிற்கு அழகு சேர்க்காமல்...அதர்மமே செய்து மறுமைக்கு ஏதும் செய்யாமல் வெறுமையாகி விட்டு...உடல் பறவைகள் திண்ண வீழ்ந்து கிடக்கிறோம்!

7 ஆம் பாடல்

அந்த அரங்கன் மட்டுமே இறைவன் என்பதை இவரைத் தவிர வேறு யாரும் இப்படி சொல்ல முடியாது என்ற அளவுக்கு அரிதியிட்டுக்கு கூறுகிறார் இவ்வாறாக...நீசர்கள் அக்யானம் என்ற கத்தி பிடித்து எது உண்மையோ அதை(அரங்கனே இறைவன்) கொலைசெய்கிறார்கள்.

என் தலை அறுத்தாலும் நான் சாக மாட்டேன்! சத்தியம் செய்து சொல்கிறேன் இலங்கை அழித்த இராமனே "தேவர்களுக்கெல்லாம் தேவன்" ஆவான்! நன்றாக கற்று உணர்ந்தவர்கள் வேறு எந்த தெய்வத்தைப் பற்றி கற்கவோ...கேட்கவோ....மாட்டார்கள்!

8 ஆம் பாடல்

செய்யக்கூடாதவை களையெல்லாம்(எம்பிரானைப்பழித்தல்) செய்யும் அவர்கள் இருக்கும் இடத்தில் இருந்துநாம் விலகி வந்து விட வேண்டும் !

9 ஆம் பாடல்

ஆஹா! அருமை! அடுத்து பாடல்...ஆழ்வாரிடம் நன்றாக திட்டு வாங்க இருக்கிறோம்! "மற்றுமோர் தெய்வமில்லை மதியிலா மானிடங்காள்" நாம் துன்பம் வரும் வரை யாரும் அவனை நினைப்பதில்லை!

"கன்றுகளை மேய்த்த எந்தாய்"கன்றுகளை மேய்ப்பவன் என்றே உரைக்கிறார் பசுக்களை மேய்ப்பவன் என்று கூறவில்லை...ஏனேனில் பசுக்கள் பசித்தால் தானே உணவுத் தேடிக்கொள்ளும்! ஆனால் கன்றுகளுக்கு வழிக்காட்டுதல்கள் அவசியம்! அவ்வாறே நமக்கும் வழிகாட்டும் அவன் திருவடி பற்றவேண்டும்!

10 ஆம் பாடல்மற்ற தெய்வங்களை படைத்து சாதாரண அருள் புரிகிறான்! "திருவரங்கத்தையே" கைகாட்டி பேரருள் புரிகிறான்! நமக்கு நாமே நம்பிகளாக நினைத்துக்கொண்டு அந்த கருட வாகனனை தவிர்த்து...சேட்டைதன் மடியகத்து செல்வம் பார்த்து (திருமகளுக்கு மூத்தவளான மூதேவியிடத்தில் செல்வம் வேண்டி இருக்கின்றோம்!)

11 ஆம் பாடல்ஓரே வில்லால் கடலை அடைத்து அரக்கர் அரசனைக்கொன்ற இராமனே செற்ற நம் சேவகனார்(அவன் நமக்கு சேவை செய்பவன்) அவன் இருக்கும் இடம் திருவரங்கம் என்று புரியாதோர் கருவிலே திருவற்றவர்.

அப்பப்பா அரங்கன்! அரங்கன்! அரங்கன் எங்கும் எதிலும் நிறைந்து விட்டான்!

அடுத்த வகுப்பு வரும் வரை அவன் நாமம் சொல்லிக் காத்திருப்போம்!

தொண்டரடிப்பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் 

🙇‍♀🙇‍♀🙇‍♀🙇‍♀🙇‍♀🙇‍♀

Comments

Popular posts from this blog

நீராட்டம்

பேரானந்தம்

எம்பெருமாட்டியின் கனா