திருமாலை (பாகம்-2) 12-22 அழகன் இருக்கும் ஊர் அரங்கம்

அழகன் இருக்கும் ஊர் அரங்கம் 


தொண்டரடிப்பொடியாழ்வாரின் "திருமாலை" ... ஆஹா... என்னவென்று சொல்வது...இப்பாசுர விளக்கம் கேட்கும் போதும்...சந்தையின் போதும்...எழுத முற்படும் போதும்...வண்டி (மனமாகிய) நகரவில்லை...நகர விருப்பமில்லை...அங்கே அங்கே நின்று விட்டது! என்ன செய்ய! பாசுரத்தின் ...ஆழ்வாரின்... அரங்கனின்... சுவை அப்படி! இதயம் வலித்த வலி (பேரின்ப வலி) சொல்லி மாளாது! வாருங்கள் ரசிக்கலாம் ஆழ்வாரின் கண்ணாடி அணிந்து அந்த அரங்கனை...அரங்கத்தை பார்க்கலாம்! தயாராக இருங்கள்...கண்கள் குளமாகி விடும்...நெஞ்சம் கனத்துப்போகும்! பேரின்பவெள்ளத்தால்! ஆழ்வாரின் சொல் வன்மை அப்படி!

12ஆம் பாடல்

பாகம் 2 ல்( 12வது பாடல்) முதல் பாடலே அவன் நாம வலிமையை உணர்த்துகிறது! அந்த நாமங்கள் பலவுடைய அரங்கனின் நாமத்தை சொல்லாமல்...கேட்காமல்...அவனது ஊர் அரங்கம் என்று எண்ணாமல்...நல்ல மனிதர்கள் துக்கம் அடைந்து (கவளை) வீழ்ந்து விடுகின்றனர்! அதனை நினைத்தால் கவலையாக இருக்கிறது! அவன் நாமவலிமை பற்றி உங்களுக்கு தெரியுமா? (இப்படி துவங்குகிறார் ஆழ்வார்) நரகத்தில் எமன்...முக்கலனிடம் (பாவங்கள் மட்டுமே செய்தவன்) நீ ஒரே ஒரு முறை அரங்கனின் நாமத்தை சொல்லியிருக்கிறாய் என்று  பேசிக்கொண்டிருக்க,அதை அங்குள்ளவர்கள் கேட்க...அந்த கொடிய நரகமும் நொடிப்பொழுதில் சுவர்க்கமாயிற்று! நாமம் உரைக்கவிட்டாலும் கேட்டாலே போதும் நரகமனைத்தும் சுவர்க்கம் ஆகும்.

13 ஆம் பாடல்

அடுத்து அவனது ஊரின் மகிமை!

வெறி(நல்ல/கெட்ட வாசனை.இங்கு "கெட்ட" பொருளில்)துர்நாற்றம் வீசக் கூடிய அலைகள் அடிக்கும் கடல் (வேலை) சூழ்ந்த இவ்வுலகத்தார்...வெறி(நல்ல வாசனை என்ற பொருளில்) நல்ல மணம் வீசுகின்ற துளசி மாலை அணிந்த அந்த எம்பெருமானை துதிக்க பிறந்தவர்கள்! இதை உணராத அறிவில்லாத அனைவரும் ஐம்பொறிகளின் வலையில் சிக்கிக்கொண்டிருக்கிறோம்!ஒரே ஒரு முறை அவனது பெயரை... இல்லை இல்லை அவனது ஊரை..(அரங்கம்) மட்டும் சொன்னால் போதும்! இவ்வுலகனைத்தும் புல் முளைத்து வெற்றிடம் ஆகி விடும்! ஏனெனில் (ஜீவராசிகள்)அனைவருக்கும் பரமபதம் கிட்டி விடும்!

14 ஆம் பாடல்

ஆஹா! அடுத்து வர இருப்பது அரங்கத்தின் அழகு! வண்டுகளின் ரீங்காரமும்...மயில்களின் மகிழ்ச்சியான ஆட்டமும்...அந்த கார்மேகம் உரசிச் செல்கின்ற அந்த பரமபதநாதன்... ஸ்ரீமன் நாராயணன் ... இருக்கும் ஊர் திருவரங்கம் என்று சொல்லாத...நினைக்காத மூடர்கள் உண்ணும் உணவை எடுத்து நாய்க்கு இட வேண்டும் (நெஞ்சம் வலித்துக் கூறுகிறார்)

15 ஆம் பாடல்

சரியாக இந்த இடத்தில் தான் மனம் நகர மறுத்து விட்டது ஏனெனில் ஆழ்வார் இங்கே தான் அழகன் இருக்கும் ஊர் அரங்கம் என்கிறார்.. மெய்யற்கே மெய்யன் பொய்யற்கே பொய்யன்... உண்மையான பக்தி பாவத்தோடு... இல்லை மித்ர பாவத்தோடு வந்தாலும் அவன் குணம்... அழகு... "பரம்பொருள் அவனே" என்ற உண்மையை உணர்த்துவான். பொய்யர்-இதர விஷயங்களில் ஈடுபட்டு அவனை மறந்தவர்களுக்கு தன்னை காண்பிக்க மாட்டான். அவனிடத்தில் கைங்கரியத்தை தவிர மற்றவற்றை கேட்கும் அனைவரும் பொய்யராவர். மெய்யனாக இருந்து நாம் அவனை சேவித்தால் அவன் அழகை காண்பித்து நம்மை ஆட்கொள்வான் அப்படிப்பட்ட அந்த அழகன் இருக்கும் இடம் அரங்கமாகும்!🙇🏻‍♀🙇🏻‍♀🙇🏻‍♀

16 ஆம் பாடல்

அடுத்து ஆழ்வார் தமக்கு உரைப்பதாய் நமக்கே உரைக்கிறார்! சூதனாய் (தெரிந்து திருடுவது சூது, நாத்திகம் உரைப்பது பிரமாணத்தை இல்லை என்று சொல்லுதல்) கள்வனாய் (மற்றவர் பொருளை எடுத்துக்கொண்டு தன்னுடையது போல் அனுபவிப்பது கள்ளத்தனம்.. அதாவது ஆத்மாவை தனது என்று நினைப்பது) தூர்த்த ரோடு (மற்றவற்றில் ஈடுபாடு உடையவர்கள்) இருந்து... பெண்களின் கயல் கண் வலையின் உள்ளே அழுந்திக் கிடந்தேன்... அப்படியே இருந்த என்னை போதரே (இங்கே வா என்ற அழைத்து) மனதில்... எண்ணத்தில் ...புகுந்து (ஆதரம்) அன்பு காதல் பக்தி இவை அனைத்தையும் தன் பால் உணரச் செய்து அவனிடத்தில் அன்பை வளரச் செய்த வடிவழகன் இருக்கும் ஊர் அரங்கமாகும். 

17 ஆம் பாடல்

அரங்கனின் கருணையினை இனிமையினை உணர்த்தும் பாடல். அடியேன் எந்த கைங்கரியமும் செய்வதில்லை. நீ இருக்கிறாய் என்ற அறிவும் இல்லை. இரும்பாய் போயிருந்த எனது நெஞ்சத்தை கொஞ்சம் கொஞ்சமாக (இறை இறை) உருகச் செய்து ... வண்டு (சுரும்பு) அமரும் சோலைகள் சூழ்ந்ததிருவரங்கத்தின் கரும்பினை (பெரிய பெருமாள் திருநாமம்-கண்களால் பருகும் கரும்பு) இந்த இரண்டு கண்களும் கண்டு கண்டு உவக்கின்றதே! 

18 ஆம் பாடல்

இனிய கடல் போன்ற குளிர்ந்த நீரைவுடைய  காவிரியை தனிப்பெரும் முதல்வனாய் (தனி முதல்வனாய் ஆட்சி புரிய பெரிய பெரிய ஆயுதம் வேண்டுமே அரங்கனிடம் என்ன இருக்கிறதென்றால் இருக்கிறதே...அவனுடைய தாமரைக் கண்கள் அந்த தாமரை கண்களில் பக்தியில் விழுந்தவர்கள் எழுந்ததே இல்லை)  ஆட்சி புரியும் ஸ்ரீமன் நாராயணன் அந்த சிவந்த கனி போன்ற அதரத்தை உடைய இந்த கண்ணனை கண்டதும் கண்கள் குளிர்ச்சியான நீரை கொட்டுகின்றது அச்சோ! நான் என்ன செய்வேன் ?அவனை பார்க்க இயலாமல் இந்த நீரானது மறைத்து விட்டதே! இந்த அற்புத வரியைக் கண்டதும் இந்தப் பாடலை விட்டு வெளிவருவதற்கு வெகு நேரமாகிவிட்டது! இந்தப் பனி அரும்பு (ஆனந்தக் கண்ணீர்) பாசுரம் படிக்கும் ஒவ்வொருவர் கண்களில் இருந்தும் வரும் என்பது உறுதி! 

19 ஆம் பாடல்

அவன் சேஷி என்பதை உணர்த்த மேற்கு திசையில் தலையை வைத்தும்... அடியவர்களை காக்க கிழக்கு திசையில் திருவடியை வைத்தும் வடக்கு திசையில் தன் பின்புறத்தை வைத்தும் (முன் அழகை காட்டிலும் அவனது பின் அழகு அனைவரையும் மயக்குமாம்) வட மொழியில் இருந்து... ஈர மொழியான ஆழ்வார் பாசுரங்கள் ரசிக்க அவர்களை அழைக்க இவ்வாறு வடக்கு பகுதியில் பின்புறம் காட்டி.. விபீஷணனை கடாய்ஷிக்க தென் திசையில் இலங்கை நோக்கி வீற்றிருக்கிறார் அரங்கன்! தங்கத்தில் ரத்தினம் பதித்தது போல் இருக்கிறது அரவணைமேல் அவன் படுத்திருப்பது இப்படி துயிலும் பேரழகைக் கண்டு என் உடலானது உருகிக் கொண்டிருக்கிறது! 🥲🙏🙇🏻‍♀

20 ஆம் பாடல்

காவேரியால் சூழ்ந்த திருவரங்கத்தில் வீற்றிருக்கும் அந்த "திருமகளை மார்பில் உடையவனும்" "மரகதத் திருமேனியையும் "உருகி ஓடும் அழகிலே தெப்பம் போல மிதந்து கொண்டிருக்கும் அவனது "திருத்தோல்கள்" ... இன்னார் இனியார் என்று பார்க்காது அனைவருக்கும் கருணை புரியும் அவனது "தாமரைக் கண்கள்" ... நீண்ட நெடுங்காலமாக பெருமையை உடைய அவனது "கிரீடம்"... இத்தகைய தேஜஸ்சை உடைய அவனை... அரங்கனை... விட்டு நாம் என்றும் அகலக்கூடாது!

21 ஆம் பாடல்

பணிவோடும்... அவன் நம்மை கைவிட மாட்டான் என்ற திட விசுவாசத்தோடும் ஒன்றி இருக்க முடியாத நெஞ்சே... இந்த சம்சார மண்டலத்திற்கே ஆபரணம் போன்றவனை... பொன்னால் ஆன மலை போன்றவனை... நம் மனத்தினால் அளவிட முடியாது

22 ஆம் பாடல் 

வேதம் அவனை அறிய புறப்பட்டது... இயலாமல் போனது...ஆசற்றார் (உபாயத்தில் குற்றம் குறை இல்லாமல்... அவனுடைய இரக்கத்திற்கு காத்திருப்பவர்கள்)மாசற்றார் (பலனில் குற்றம் குறை இல்லாமல்)  மாசில்லாமல் அவனை வணங்கி இருக்க வேண்டுமே தவிர அவன் பெருமைகளை முழுதாக பேசிவிட நம்மால் இயலாது! 

அப்பப்பா! பாசுரம் முடிந்த பின் அடியேனுக்கு ஜலமனைத்தும் காவேரியாகவும்...மரமனைத்தும் அரங்கத்தின் சோலையாகவும்... திரும்பும் திசையனைத்தும் அந்த அரங்கனாகவே காட்சி படுகின்றது! 

தொண்டரடிப்பொடியாழ்வார் திருவடிகளே சரணம் 

🙇🏻‍♀🙇🏻‍♀🙇🏻‍♀🙇🏻‍♀🙇🏻‍♀🙇🏻‍♀


Comments

Popular posts from this blog

நீராட்டம்

பேரானந்தம்

எம்பெருமாட்டியின் கனா