திருமாலை பாகம்-3 (23-33)
ஆழ்வார் எப்போதும் கற்றுக் கொடுப்பார்நமக்கு. தீவிர பக்தியை வெளிப்படுத்துவார். இந்த 10 பாடல்களிலும் தன்னுடைய நைச்சிய பாவத்தை வெளிப்படுத்தி நம்முடைய மேம்போக்கான பக்தியை வெளிச்சமிட்டு காட்டுகிறார். இப்படி எல்லாம் ஒருவர் தன்னை தாழ்த்திக் கொள்ள முடியுமா. ஆழ்வார் தன்னை அவ்வளவு தாழ்த்திக் கொள்கிறார். அடியேனுக்கு ஒரு பயம் எப்போதும் இருப்பதுண்டு நம்முடைய சிறுமை அனைத்தும் ஒப்புக் கொண்டால் நம்மை பிடித்தவர்கள் நம்மை விட்டு சென்று விடுவார்கள் என்று பலவற்றை சொல்லாமல் விட்டதுண்டு. ஆனால் ஆழ்வார் ஒன்று நமக்கு உரைக்கிறார். எம்பெருமானிடம் அனைத்தையும் ஒப்புக்கொள்கிறார். எம்பிரான் அவரை விட்டு நீங்க முற்படும்போது அவன் மேன்மையை உரைக்கிறார். அவன் செய்ய வேண்டிய கடமையை அவனுக்கே எடுத்துரைத்து அவனை அகல விடாமல் இறுகப்பற்றுகிறார். ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் ஏகாரத்தின் "ஒலி" வெளிப்பாடாக அமைந்துள்ளது. ஏழையேன் ஏழையேனே... நகருளானே... தோன்றினேனே... மூர்க்கனேனே... பொய்யனேனே.. இந்த ஏகாரத்தின் ஒலி வெளிப்பாடு மனதை ஏதேதோ செய்கிறது. நைச்சிய பாவத்தின் வெளிப்பாடாகவும்... கதறி அழைத்தலின் வெளிப்பாடாகவும் அமைந்துள்ளது... பாவம் அரங்கன் எப்படித்தான் ஏற்றானோ ஆழ்வாரின் கதறலை... மனம் என்ன பாடு பட்டதோ... இந்த அருந் தமிழுக்குத்தான் எத்தனை எத்தனை மாண்புகள்... ஒவ்வொரு 'ஏ'காரத்திற்கும் 'ஓ'காரத்திற்கும் 'ஆ'காரத்திற்கும் எவ்வளவு எவ்வளவு உணர்ச்சி வெளிப்பாடுகள்!
வாருங்கள் நாம் அனைவரும் ஆழ்வாரோடு அரங்கனை உருகி அழைப்போம் கதறி தவிப்போம் இறுக பற்றுவோம்!
23 ஆம் பாடல்:
ஆழ்வார் எப்போதும் பாடுபொருளாக அரங்கத்தையே எடுத்துரைப்பார்.அடுத்து ஆழ்வார் பாட இருக்கும் பாடுபொருள் திருவரங்கத்தின் சிறப்புகளும் ஒன்றான'திருக்காவிரி'. அரங்கத்தில் பாயும் காவிரிக்கு தனிச்சிறப்பு உண்டு. காவிரி பிறந்த இடத்திலிருந்து கடலில் கலக்கும் வரை அகண்ட காவிரியை அரங்கத்தில் மட்டுமே சேவிக்க இயலும். வேறு எங்கும் சேவிக்க இயலாது! கங்கையை விடவும் காவிரிக்கு சிறப்பு உண்டு. எதனால் தெரியுமா? பெருமாளின் திருவடி கிடைத்ததனாலே கங்கைக்கு புனிதம்; ஆனால் அவன் முழுக்க காவிரியின் நடுவே வீற்றிருப்பதனால் காவிரிக்கு கங்கையை விடவும் சிறப்பு! அந்த காவிரித்தாய் நீரின் மிகுதியால் மட்டுமா பொங்குகிறது? அந்த பெரிய பெருமாள் திருவடி கிடைக்க போகிறது என்றல்லவா பொங்கி பாய்கிறது! அந்த திருவரங்கத்தில் அடியார்களை காக்கும் சேஷியாகவும்... அனைவரையும் தேவர்கள் உட்பட காக்கும் இறைவனாகவும்... எல்லோரையும் தன்னிடம் அழைத்துக் கொள்ள காத்திருக்கும் ஈசனாகவும் ... எப்போது வேண்டுமானாலும் எழுந்து வரலாம் போல் படுத்திருக்கும் ஓர் கிடக்கை கண்டு எவ்வாறு அவனை மறந்து வாழ்வது? அவனை பிரிந்தால் உயிர் வாழ முடியாது... அவனிடம் முழுக்க சேரவும் முடியாது ...தவித்து கொண்டிருக்கிறேன். ஏழையேன் ஏழையேனே!
24 ம் பாடல்:
அடுத்து வரும் பாடலில் அரங்கனுக்கு புதிய பெயர் சூட்டுகிறார் தொண்டரடி பொடியாழ்வார். ஆம்! அவனை கள்வனார் என்று அழைக்கிறார்... ஏனெனில் அடியார்களை எப்போதும் கவர காத்திருப்பதால் அரங்கனார் கள்வனார் ஆனார். பொங்கி பாயும் காவிரிக்கும் விரிந்த சோலைகளுக்கும் நடுவே அரங்கன் கிடக்கும் அழகை கண்ட பின்னும் மனம் ஏனோ பாறாங்கல்(வலியை போலும்) போலும்! அவனை நினைத்து பக்தி செய்யாமல் மற்ற விஷயங்களில் ஈடுபாடு காட்டுவது போல் அவனிடமும் மேலோட்டமான பக்தியையே செய்து கொண்டு காலத்தை கழிக்கின்றாயே!
25 ம் பாடல்:
அடியேன் அந்தணருக்கு உரிய கர்மயோகம் ( மந்திரம் உரைத்தல்,முத்தீ வளர்த்தல்) செய்யவில்லை ... எந்த அறிவும் இல்லை (ஞான யோகம்) உன்னை பக்தியோடு பற்றவும் இல்லை (பக்தி யோகம்) அடியேன் எதுவும் செய்யாவிட்டாலும் நீ அப்படி அல்ல நீ பரிபூரணன் உன்னிடம் அனைத்தும் உண்டு அதைக் கொண்டு அருள் செய்ய வேண்டும்!
26ம் பாடல்:
உன்னை போதெல்லாம் (காலமெல்லாம்) போது கொண்டு (அப்போது மலர்ந்த புஷ்பம்) ஒரு நாளும் சமர்ப்பித்ததில்லை. நன்மை செய்யும் மொழிகளாலே உன் திருக்குணங்களை சொன்னதில்லை.. அந்தோ! (எல்லே) பின் எதற்காகத்தான் பிறந்தேனோ!
27ம் பாடல்:
ஆழ்வார் தனது மனப்பயணத்தை ராம அவதாரம் பக்கம் திருப்பி அங்கு கைங்கரியம் மேற்கொண்ட வானரங்கள் போலவோ கள்ளம் கபடம் இல்லா அணில்கள் போலவோ அடியேன் இல்லையே! உருகும் நெஞ்சை பெறாமல் மரம் போன்ற நெஞ்சை உடையவனாய் அரங்கனுக்கு அடிமை செய்யாது இருக்கின்றேனே!
28ம் பாடல்
அடுத்த பாடலில் அழகான சொல் ஒன்றை உபயோகிக்கிறார் ஆள்வார்.."ஓரா" ...ஓரா என்றால் கண்டும் காணாமலும் இருப்பது! அரங்கன் நம்முடைய பாவங்களையும் சிறுமைகளையும் கண்டு ஒதுங்குபவன் இல்லை நாம் செய்யும் தவறை கண்டும் காணாமல் இருப்பான். ஆனால் நான் செய்யும் நன்மையை ஆயிரம் மடங்கு பெருக்குவான்... அவனை தேவர்களாலும் அறிய இயலாத பேரொளியனாய் இருப்பான்... ஆனால் உண்மையான பக்தி உடைய அடியார்கள்(கஜேந்திரன்)அழைத்தால் நீர்ப்புழுவை (முதலை) அழிக்க சீறிப்பாய்ந்து வருவான்.. அப்படி இருக்கும் அரங்கனை அடிமை செய்யாமல் ஏன் தான் பிறந்தேனே?(தோன்றினேனோ)
29ம் பாடல்:
அடுத்து வரும் பாடல் எங்கே இருக்கிறது என்று வெகு காலம் காத்திருந்து இதோ கிடைத்துவிட்டது! இப்பாடலை கேட்கும் அனைவரின் கண்களும் நிறைந்து தான் போகும்! திவ்ய தேச இடங்களில் பிறக்காத காரணத்தால் அடியேனுக்கு ஊர் என்று ஒன்றும் இல்லை! காணி இல்லை (முற்காலத்தில் காணியாட்சி என்ற முறை ஒன்று இருந்தது. செல்வந்தர்கள் தங்களுடைய நிலங்களை காணியாக எழுதி வைப்பர் அதில் வரும் வருமானத்தை எடுத்துக்கொண்டு எம்பிரானுக்கு கைங்கரியங்கள் மேற்கொள்ளலாம்) அப்படி எந்த காணியும் எனக்கு இல்லை! திவ்யதேசத்தில் எந்த உறவுகளும் மற்றவர்களும் இல்லை! அனைவருக்கும் புகலிடமான உன் திருவடியையும் பற்றினேன் இல்லை! ஆனாலும் அரங்கனே உன்னை விட்டால் யார் இருக்கிறார்கள் அடியேனை காப்பதற்கு?🥲🥲🥲
30ம் பாடல்:
ஆழ்வார் சென்ற ஐந்து பாடல்களிலும் தன்னிடம் நற்குணம் எதுவும் இல்லை என்றால் அடுத்து வரும் ஐந்து பாடலிலும் தனக்கு இருக்கும் தீயவற்றை பட்டியல் இடுகிறார் (ஆழ்வாரைக்கு அது நைச்சிய பாவம். அவர் இவ்வாறாக தன்னை தாழ்த்திக் கொள்கிறார். ஆனால் நமக்கு அவர் கூறும் அனைத்தும் அப்படியே பொருந்துவதாக அமைகிறது) அவனை வாயினாலோ கண்ணினாலோ உணர முடியாது. தூய்மையான மனத்தினால் மட்டுமே உணர முடியும். ஆனால் அப்படிப்பட்ட தூய்மையான மனமும் அடியேனுக்கு இல்லை. திமிர்...பொறாமை...பேராசை...விரோத பாவம்(செற்றம்) இவ்வாறு அனைத்தும் பெற்றிருக்கிறேன். தீயை போல் சுடும் (தீவிளி விளிவன்) சொற்களையே பேசி திரிகிறேன்! அதற்காக என்னை அப்படியே விட்டு விடுவாயா?எனக்கு உன்னைத்தவிர (நிலத்தில் மலர்ந்த(புனத்துழாய்) துளசி எவ்வாறு புத்தம் புதிதாய் இருக்குமோ அவ்வாறு உன் திரு மார்பிலே துளசி மாலையை உடையவனே! அரங்கனுக்கு மட்டும் இரு மாலைகள் ஒன்று புனத்துழாய் மாலை மற்றொன்று காவிரி அரங்கத்தை சுற்றி மாலை போல அமைந்திருப்பதால் காவிரியினால் ஆன மாலை! )கதி என்று யாரும் இல்லை!
31ம் பாடல்:
ஆழ்வாரின் பட்டியல் இன்னும் இன்னும் நீண்டு கொண்டே போகிறது! அரங்கனே உன்னை அடைய எந்த தவத்தையும் மேற்கொள்ளவில்லை! நல்ல காரியங்கள் செய்வதற்காக சிலர் தனம் வைத்திருப்பர். அப்படியும் எனக்கு ஒன்றும் இல்லை! உப்பு நீர் போல யாருக்கும் உபயோகம் இல்லாமல் எந்த நன்மையும் செய்யாமல் இருந்தேன்.. என் மீது அன்பு செலுத்தும் சிவந்த செவ்வாய் உடையவர்களுக்கும் அவர்கள் வெறுக்கும் படியாக காரியங்களையே செய்து கொண்டிருந்தேன். எனக்கு அளித்த பிறவி வீணானது..ஆனாலும் அரங்கனே நீதானே என்னை காக்க வேண்டும்! பெற்றதாய் யாராவது தன் குழந்தை கிணற்றில் விழப்பார்த்து கொண்டிருப்பாரா? என்ன?
32ம் பாடல்
நித்யசூரிகள் அந்த மதுசூதனன் இடத்தில் லயித்து சாமகானம் பாடுவர். இங்கே திருவரங்கத்தில் வண்டுகள் இருக்கும் பூக்களில் இருந்து மது அனைத்தையும் அருந்திவிட்டு ரீங்காரம் இடுகிறது! இந்த பூலோகத்திற்கு ஆபரணமானது திருவரங்கம். இங்கே அரங்கனுக்கும் கரு மேகத்திற்கும் ஒப்புமையை கூறுகிறார் ஆழ்வார் நிறத்தால்... குளிர்ச்சியால்... கொட்டித் தீர்க்கும் கருணையினால்... இரண்டும் ஒன்றே!ஆனால் இன்னும் இவன் எளிமையானவன்! (கண்ணனே) அப்படி இருக்கும் உன்னை அடைய வழி ஒன்றும் அறியாது புகலற்று அறிவற்று உன் முன் நிற்கிறேன்! மூர்க்கனேன் மூர்க்கனேனே!
33ம் பாடல்:
எல்லாவிதமான உண்மையினையும்(மனதால்...உடலால்..செயலால்) அடியேன் போக்கடித்து விட்டு விரிந்த கூந்தலை உடைய பெண்கள்(விலை மாந்தர்) வலையில் அகப்பட்டு பொய்யால் நிரம்பி விட்டேன்! வேறு போக்கிடம் இல்லாமல் வெட்கத்தை விட்டு உன் முன் நிற்கிறேன்! ஏனெனில் நீ ஸ்வாமி நான் அடிமை(ஐயனே) உன் அருள் அன்பின் ஆசையினால் உன் முன் நிற்கிறேன் பொய்யனாக! பொய்யனேன் பொய்யனேனே!தொண்டரடிப்பொடியாழ்வார் பொய்யன் என்று அவரை உரைக்கிறார் என்றால் நாமெல்லாம்....
கன்னத்தில் பலத்த அடி பட்ட ஓர் உணர்வு!
தொண்டரடிப்பொடியாழ்வார் திருவடிகளே சரணம்
🙇🏻♀🙇🏻♀🙇🏻♀🙇🏻♀🙇🏻♀🙇🏻♀
Comments
Post a Comment