இராமாநுச நூற்றந்தாதி
பெரியகோவில் நம்பி என்றழைக்கப்படும்
"திருவரங்கத்தமுதனார்" ஆல் இயற்றப்பட்டது இந்த "திவ்யப்பிரபந்தம்". இது அரங்கனையோ...இராமனையோ...கண்ணனையோ.. பற்றியதோ அல்ல...
முழுவதும் தனது ஜகதாச்சார்யனான"இராமானுசரை" பற்றியது... சிறப்பு பெற்ற "களித்துறை அந்தாதி " யினால் ஆனது.. இந்த திவ்யப் பிரபந்தத்தில் வரும் பாடல்கள் எதுகை... மோனை... சந்தநயம்...உடையதாய்..செவிக்கும் இனிய தாய்...மனதிற்கும் இனியதாய் அமைந்திருக்கிறது! நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் இராமாநுச நூற்றந்தாதி இயற்பாவைச்சேர்ந்தது. கடைசி ஆயிரமாக அமைந்துள்ளது!
எங்கிருந்தோ பாவின் ஒலி ஒலிக்கிறது!
பூ மன்னு ; பா மன்னு; தாம் மன்ன ; நாம் மன்னி இப்படி ஒலிக்கிறது கேட்பதற்கு தேனிசையாய் இருக்கிறது! இது வேறெங்கும் அல்ல...இந்த திவ்யப் பிரபந்தத்தின் முதல் பாடல் தான் அது! வாருங்கள் ரசிக்கலாம்! ஆஹா முதலில் வருவது நம் தாயார் தான் ...🙏 பெரிய பிராட்டியை மார்பிலேஉடையவன்(பெரிய பெருமாள்)🙏 அந்த பெரிய பெருமாளின் கல்யாண குணங்களில் பெரிதும் ஈடுபட்ட நம்மாழ்வார்🙏....அந்த மாறனின் திருவடியை பணிந்து உய்ந்த "இராமானுசர்" 🙏... இந்த இராமாநுசரை தேடி இவரே கதியென்று வந்தடைந்த பல கற்ற பெரியோர்கள் 🙏... அந்த சிறப்புடைய "எம்பெருமானார்" திருவடி பணிந்து அவர் திருநாமங்கள் சொல்லுவோம்!
அடுத்த பாடல் எம்பெருமானாரின் குணத்தை மட்டுமல்ல...திருவரங்கத்தின் சிறப்பையும் கூறுகிறது...சோலைகள் மிகுந்து இருப்பதால் தேன் பெருகி ஓடுகிறது! இரு காவிரியும் இருப்பதனால் நீர் வளத்திற்கு குறைவில்லை! இங்கே அரங்கன் இருப்பதனால் அருள் வளத்திற்கும் குறைவில்லை! இப்படிப்பட்ட அரங்கனின் திருவடியை மனத்தில் கொள்ளாதவர்களையெல்லாம் விட்டு விலகி... மாபெரும் கைங்கர்யங்களைச் செய்த குறையல் பிரானை(திருமங்கையாழ்வார்) விட்டு நீங்காத(விள்ளாத) மிகுந்த கருணைஉடையவரான இராமநுசரை விட்டு வேறெதையும் நினைக்காது (உள்ளாது) என் நெஞ்சம்...
அடுத்த பாடல் எம்பெருமானாரின் அடியார்க்கு ஏற்றம் செய்வதாக அமைந்துள்ளது ... அகங்கார மமகார உடைய நல்ல குணம் இல்லாதவர்களிடம் இருந்து விலகி...தூய... செம்மையான...குணம் உடைய எம்பெருமானாரின் அடியவர்கள் திருவடிக்கீழ் சேர்த்ததற்கு மனமே உன்னை வணங்குகிறேன்! என்று தன் மனத்தையே வணங்குகிறார் திருவரங்கத்தமுதனார்!
அடுத்த பாடல் அமுதனார் கூறுவது அவருக்கு உரைப்பது போல் நமக்கே உரைக்கிறார் ... உயர்ந்த ஆச்சாரியான் ஆன அந்த இராமானுசர் என்னையும் ஒரு பொருளாக்கி(நம் ஆத்மா அவன் அடிமை என உணர வைத்து) இரு வினைகளையும் போக்கி(பாவ புண்ணிய) அந்த "திருமாலையே" சேவிக்க வைத்தவர் இந்த இரமாநுசர். அப்படிப்பட்ட எம்பெருமானார் தம் திருவடிகளை என்தலையிலே இருத்தினார்...இனி என் ஆத்மாவுக்கு எந்த அழிவு மில்லை.
எனக்கு அனைத்தும் எம்பெருமானார் மட்டுமே! இதை மனத்தில் குற்றம் உடையவர்கள் பழித்தாலும் அது பழியாகாது... அவரின் கல்யாண குணங்களில் ஈடுபாடு உடையவர்கள்...அவர் திருநாமங்களை எந்த நேரமும் சொல்பவர்கள் இந்த பாடலில் குற்றம் கண்டறிய மாட்டார்! ஏனெனில் இது பக்தியால் வந்த பாடல் என்று அவர்களுக்குத் தெரியும்!
பெருமைமிக்க கவிகள் எதுகை மோனை சப்தம் இவையனைத்தும் பக்தியால் பொருந்தப்பாடுவர்... ஆனால் எனக்கு பக்தியில்லை...அறிவில்லை...மனதினுள் தூய்மை இல்லை!(இவ்வாறாக தம்மை தாழ்த்திக் கொள்கிறார்.. இவையனைத்தும் பெற்றிருந்தும்) ஆனால் உற்சாகம் மட்டும் இருக்கிறது...அதுவும் அவனது பெருங்கீர்த்தியினால்!
வார்த்தைகளால் விவரிக்க இயலாது கூரத்தாழ்வான் புகழை!பிறப்பு...ஞானம்...தனம்...இவற்றால் ஏற்படும் கர்வம்(முக்குறும்பு) இவையனைத்தும் கடந்தவர் கூரத்தாழ்வான்! ஸ்வாமி கூரத்தாழ்வானே திருவரங்கத்தமுதனாருக்கு "பஞ்ச சம்ஸ்காரம்" செய்து வைத்த ஆச்சார்யன் ஆவார் !பெருமாளின் திருவதாரம் அவர்! அவரது திருவடி பற்றிய பின் ஆச்சார்யன் கிருபை கிட்டி விட்டது...இனி என்ன வேலை எனக்கு அந்த "இராமானுசரின்" கல்யாண குணங்களைப் பாடுவதைத்தவிர...என் பாவம் அனைத்தும் ஓடி விட்டது எந்தவித அசாத்திய முயற்சியும் இல்லாமல்! இனி பரமபதமும் சுலபமே!
அன்றொரு நாள் வேதக்குருத்தான உபநிடதங்களை அழகான தமிழில் எதுகை மோனையோடு ஒன்றிணைத்து... திவ்யப் பிரபந்த பாடலான "வையந்தகளியா"என்ற பாடலைப் பாடி புறவிருள் அகற்றும் திருவிளக்கு ஏற்றினார் தம் பாடலாலே பொய்கையாழ்வார்!அது போல அக்யானம் என்னும் வருத்தத்தை கொடுக்கும் புறவிருளை அகற்றினார் நம் இராமாநுசர்...அந்த பொய்கையாழ்வாரை மனதில் இருத்திய இராமாநுசரே எமக்கு ஜகத்குரு.... இறைவன் ஆவான்!
ஒவ்வொரு பாடலிலும் இராமாநுசரையே கூறுகிறார்... ஆனால் வேறுவேறு விதமாக... இன்னும் இந்த திருவரங்கத்தமுதனார் என்னவெல்லாம் பாட இருக்கிறார்...
காத்திருப்போம் அடுத்த பாடலுக்காக...
திருவரங்கத்தமுதனார் திருவடிகளே சரணம்
🙇🏻♀🙇🏻♀🙇🏻♀🙇🏻♀🙇🏻♀🙇🏻♀
Comments
Post a Comment