திருமாலை பாகம்-4 (34-45)


தொண்டரடி பொடி ஆழ்வாரின் திருமாலை பாகம் நாலோடு நிறைவு பெறுகிறது... திருமாலை...ஐ....ஐ....ஐ.....ம்ம்ம்ம்ம்.....இதயம் வலிக்கிறது...தொண்டரடிப்பொடியாழ்வார்... தன்னை தாழ்த்தி தாழ்த்தி... நம்மை நமக்கு உணர்த்துகிறார்...தான் செய்த தவறுகளை சுட்டிக் காட்டி அரங்கனை அழைக்கிறார்...அவர் செய்தது தவறென்றால்? நாம் செய்தது...செய்வது...சட்டென குப்பைத்தொட்டியில் நின்ற ஓர் உணர்வு...அடியேனுக்கு. அப்படியிருந்தது மட்டுமல்லாமல், அதுவே சரியென நினைத்தது! தவறுகள் அவ்வளவு இயல்பாகிப்போனது! தவறிலேயே ஊறித் திளைத்து...புரையோடி... கொஞ்சம் கூட கூச்சமில்லாமல் இருப்பது புரிந்தது, ஆழ்வார் பாசுரங்களால்! நம்மை தூய்மைப்படுத்தி அரங்கனை பற்றும்படிவைக்க...அத்தனை அத்தனை தன்னை தாழ்த்தி கொள்கிறார்! மனம் தூய்மை பெறுமா... அரங்கன் திருவடி பற்றுவோமா... ஆனால் நாம் இருக்கும் நிலையை நன்றாக உணரலாம்! வாருங்கள்... ஆழ்வாரைப் பற்றுவோம்! அவர் நம்மை கரைத்தேற்றுவார் என்ற முழு நம்பிக்கையோடு!

34 ம் பாடல் 

இங்கு அங்கு என்று குறிப்பிட்டு சொல்ல இயலாத படி எங்கும் எதிலும் வீற்றிருக்கிறான் அரங்கன்... அவன் நம் உள்ளத்தின் உள்ளும் நிறைந்திருக்கிறான் என்பதை உணராமல் கள்வனாகிய நான் ஆளுக்கு தகுந்தார் போல் எல்லாம் வேடமிட்டு கொண்டிருக்கிறேன்.(விஷயம் எதுவும் தெரியாதவர்கள் இடத்தில் சென்று நான் எவ்வளவு பக்தி செய்கிறேன் தெரியுமா? (எவ்வளவு பெரிய பக்திமான் என்று கூறும் படியாகவும்) என்றும்... விஷயம் தெரிந்த ஞானிகள் இடத்தில் சென்று 'நைச்சிய' (அடக்கம்) பாவத்தை வெளிப்படுத்தி அடியேனுக்கு எதுவும் தெரியாது என்று கூறி... அவர்களிடத்தில் ஆஹா! இவன் எவ்வளவு அடக்கமானவன் என்று வியக்கும் படி நடந்து கொள்கிறேன்). ஆனால் நாம் சிந்திக்கும் சிந்தனை உள்ளும் அவன் இருந்து பார்த்து கொண்டிருக்கிறான் என்பதை உணரும் போது வெட்கப்பட்டு (வெள்கிப்போய்)விலா எலும்பு உடையும்படியாக சிரிப்பு வருகிறது!

35ம் பாடல் 

அன்று ஒரு நாள் இந்த பூமியை மகாபலி இடம் இருந்து காக்க மூவுலகும் தன் திருவடி படும் படியாக ...(தலைவிளா) திருவடிக்கு கீழ்... வராதவர் யாரும் இருக்க க்கூடாது என்று அனைத்து தலைகளிலும் வைத்து கடந்தார் மூவுலகையும்! அப்படிப்பட்ட உன்னை விட்டு விட்டு வேறு யாரையும் வணங்க மாட்டேன்! (உன்னை அல்லால்) சிவந்த கண்களை உடையவனே... (ஆழ்வாரின் மீது உள்ள பூரிப்பு காரணமாகவும் அரங்கனின் கண்கள் சிவந்து இருந்தது) ஆவியே... (உன்னை விட்டால் என் உயிர் போய்விடும்) அமுதே...(அனுபவிப்பதற்கு நீ மட்டுமே உரியவன்) எந்தன் ஆருயிரே! உன்னைத் தவிர வேறு யாரையும் ஸ்வாமியாக... அய்யனாக... பாவியேன்(சேவிக்க மாட்டேன்). நீ குற்றம் குறை பார்ப்பதில்லை அது தெரியாமல் என்னுடைய குற்றம் நினைத்து ஒதுங்கினேன் உன்னை விட்டு. நான் பண்ணிய பாவத்தால் தான் உன்னை விட்டு விலக நினைத்தேன். (பாவியேன் பாவியேனே).

36 ம் பாடல்

அன்று ஒரு நாள் இந்திரன் கல்மழை பொழிந்தான்! அப்போது அந்த கல்மழையிலிருந்து ஆயர்களையும் பசுக்களையும் காக்க கோவர்தனகிரி மலையை ஏழு வயது சிறுவனாக...பாலகனாக.. (மைந்தனே) ஏழு நாட்கள் வரை தூக்கி அனைவரையும் காத்தவனே! மதுரமான நதியே...(கடல் என்று ஆழ்வார் சொல்லவில்லை ஏனெனில் கடல் நீர் உபயோகம் அற்றது. தாகத்தை தணிக்காது. குளிர்ச்சியையும் தராது. ஆதலால் நதி என்று குறிப்பிடுகிறார்) மான்கன்னு போன்று (உழைக்கன்று) மயக்கும் கண்களை உடைய பெண்களின் வலையில் அகப்பட்டு அடியேன் துடித்துக் கொண்டிருக்கிறேன்! அப்படி துடிக்கும் என்னை பார்க்காமல் செல்கிறாயே! அந்த மான் நோக்கில் இருந்து நான் மீள உன்னுடைய நோக்கு... ஒரே ஒரு பார்வை...மட்டுமே அடியேனுக்கு வேண்டும். உன்னைத் தவிர வேறு யாரையும் அழைக்கவில்லை .

37 ம் பாடல் 

எப்போதும் கலங்கி இருக்குமாம் காவிரி. ஏனெனில், காவிரியில் வெள்ளம்(புது தீர்த்தம்) எப்போதும் வந்து கொண்டிருக்குமாம்! மேற்குப் பகுதியிலிருந்து வரும் போது, அரங்கனை சேவிக்கப் போகிறோம் என்ற மகிழ்வில் கலங்கி இருக்கும். கிழக்கில் செல்லும்போது பிரிந்து போகிறோம் என்று கலங்கி இருக்குமாம்! அங்கு ஓங்கி வளர்ந்து இருக்கக்கூடிய ... ஒளி பொருந்திய தேஜஸ் உடைய பெரிய பெருமாள் மட்டுமே நமக்கு தந்தையும் தாயும் ஆவார்! அடியேன் எத்தனைஎத்தனை முறை அவனை ஐயனே... என்று அழைக்கிறேன்... அவன் ஒரு முறையேனும் 'நம்முடைய பையன்'(நம் பையல்) என்று உரைக்கவில்லையே! அவன் திருவுள்ளம் அவ்வளவு கொடியதா...

38 ம் பாடல்

இந்த 38வது பாடல் மிக மிக விசேஷமானது. பல ஏற்றங்களை உடையது. மகாபாரதத்தில் தேறியது 'பகவத் கீதை' அதில் தேறியது 'ஸரம ஸ்லோகம்'!   அதுபோல இந்த பாசுரத்தின் அர்த்தம் தெரிந்தால் போதும், மொத்த திருமாலையின் அர்த்தமும் தெரிந்துவிடும்! நம்மாழ்வாரும்... ஆண்டாளும்... 'த்வயதின்' முதல் இரண்டாம் வரிகளுக்கு அர்த்தம் உரைத்தனர். ஆனால் 'த்வயதின்' மொத்த அர்த்தத்தையும் திவ்ய பிரபந்தத்தில் சொல்ல முடியுமானால் அது இந்த பாசுரம் தான்... இந்த தொண்டரடி பொடி ஆழ்வார் தான்! இந்த பாடலின் நான்கு வரிகளும் மிக நீண்ட நெடிய உள்ளடக்கத்தை கொண்டிருக்கிறது! சற்று ஆசுவாசப் படுத்தி கொண்டு துவங்குவோம்!

மேம்பொருள் போகவிட்டு 

மேம் போக்கான விஷயங்களை  (சரீரம் மட்டுமே எல்லாம் என்று நினைத்து கொள்ளுதல்) போக விட வேண்டும். மேலோட்டமாக பார்க்கும் போது ஐம்புலன்களின் இன்பம் பெரியதாக... இன்பம் பயப்பதாக இருக்கும். ஆனால் விஷயம் தெரியத்தெரிய அதுதான் தடை எனத் தெரியும்! அதனால், அதை அனைத்தையும் வாசனையோடு விட வேண்டும். 

மெய்ம்மையை மிக உணர்ந்து 

மெய்ம்மை என்றால் சத்தியம்.. எது மாறாமல் இருக்கிறதோ அது சத்தியம் (ஆத்மா). எது மாறக்கூடியதோ அது அசத்தியம்.. எதற்கு அழிவில்லையோ அது சத்தியம்(ஆத்மா). ஆத்ம சொரூபத்தை நன்றாக உணர வேண்டும்... ஆத்மா நித்தியமானது, அணுவைப் போன்று மிகச் சிறியது... அழிவில்லாதது... அடியார்களுக்கு விருப்பமாக இருப்பது... ஆத்மா தான் சத்தியம் என்பதை உணர வேண்டும்..

ஆம் பரிசு அறிந்துகொண்டு 

ஆம் பரிசு என்றால் மிகவும் அழகான உயர்ந்த பரிசு!... பசுவின் உடம்பில் இருக்கும் ஆத்மா தன்னை பசுவாக நினைத்து, தனக்கு ஆம் பரிசாக 'புற்களையே' நினைக்கும்! தேவர்களின் ஆத்மா, தனக்கு ஆம் பரிசாக 'அமிர்தத்தையே' நினைக்கும்! மனிதர்களின் ஆத்மாவானது, சரீரத்திற்கு உண்டானதையே ஆம் பரிசாக நினைக்கிறது... ஆனால் 'அடியேன்' என்னும் பதத்தை உணர்ந்த ஆத்மாக்கள் மட்டுமே ஆம் பரிசாக 'கைங்கரியத்தை' ஏற்றுக் கொள்ளும்... நம் ஆத்மாவிற்கு அழகான சிறந்த பரிசு எது என்றால், அது 'கைங்கரியமே' ஆகும். 

ஐம்புலன் அகத்து அடக்கி 

திசைக்கு ஒருபுறமாக இழுக்கும் ஐம்புலன்களையும் அடக்கி வைக்க வேண்டும்... அதற்கு பரிசாக, கைங்கரியத்தையே கொடுக்க வேண்டும்! 'கைங்கரியம்' என்பதன் பொருள் நமக்கு மகிழ்ச்சி அளிப்பது மட்டும் அல்ல! அவனுக்கு மகிழ்ச்சி அளிப்பது... உவப்பானது... எதுவோ ...அதுவே, கைங்கரியம் ஆகும்! 

காம்பறத் தலை சிரைத்து 

காம்பறத் தலை சிரைத்து என்பதன் பொருள் மொட்டை அடித்து கொள்ளுதல் என்பதாகும்! நான் சரணாகதி அடைந்தேன் என்னிடம் எதுவும் இல்லை! 'நான் எனது' என்ற தலையில் உள்ள செருக்கின் சுமையைக் குறைத்தல்...

உன் கடைத்தலை இருந்து  

கடைத்தலை என்றால் தலை கடை...சந்நிதி (தலைவாசல்) என்று பொருள் படும்... ஏன் எம்பிரானின் திருவடியை சொல்லாமல், கோயிலை சொல்கிறார் என்றால் ஆழ்வார் கொஞ்சம் ஒதுங்கி இருக்கிறார், அவ்வளவு நல்லவன் இல்லை என்ற பாங்கில்.... ஆனாலும் விட்டுப் போகவும் மனம் இல்லாமல், கோவிலின் உள் செல்லவும் மனம் இல்லாமல், தலை வாசலில் நின்று கொண்டிருக்கிறார்...

சோம்பரை

இதில் சோம்பரை என்றால், நம்முடைய ஆத்ம ரக்ஷ்கத்தில் நாம் சோம்பி இருக்க வேண்டும்.எல்லாம் அவன் செயல் என்று ரக்ஷ்கத்தில் முயற்சி இல்லாமல் இருக்க வேண்டும்! எது நடந்தாலும் அவன் பொறுப்பு என்றிருக்க வேண்டும்.

 இதற்கு ஒரு சம்பவம் எடுத்துக்காட்டாக கூறப்படுகிறது... ஒரு சமயத்தில் சுவாமி திருக்கண்ணமங்கை ஆண்டான் தெருவில் நடந்து கொண்டிருக்க... அங்கே சண்டை நடந்து கொண்டிருக்கிறது. ஒருவன் நாய் வளர்த்து வந்திருக்கிறான். அந்த நாயை மற்றொருவன் அடித்துக் கொன்றுவிட்டான். இதைப் பார்த்த நாய் வளர்த்தவன் நாயை கொன்றவனை, தன் கத்தியால் குத்தி கொன்று விட்டான். இப்போது நாயும் இல்லை, அதனை கொன்றவனையும் கொன்று விட்டோம், என்று தன்னையும் கத்தியால் குத்தி இறந்து விடுகிறான்! இந்த காட்சியை கண்ட சுவாமி திருக்கண்ணமங்கை ஆண்டான் ... இட்ட சோற்றை உண்டு வாழும் நாயிற்காக ஒருவன் சாகிறான் என்றால் நாமும் நாய் போல பெரிய பெருமாள் இடத்தில் கிடந்தோமானால், அவன் நம்மை பார்த்து கொள்வான், என்று அச்சனம் அத்தனையும் உதறிவிட்டு, திருக்கண்ணபுரத்தில் அன்றைய நாளிலிருந்து இறக்கும் வரை கைங்கரியம் செய்து வந்தார்... அப்படிப்பட்ட 'சோம்பரையே' அவன் உவப்பான் அந்த காவிரிசூழ் அரங்கன்!

39ம் பாடல்

நான்கு வேதங்களைக்கற்ற ஞானிகளாக (சதுப்பேதிமார்கள்)இருந்தாலும், எம்பிரானுக்குகைங்கரியம் புரிவதில் ஆசைஇல்லாமல்இருந்தார்களானால் (அடிமையின் குடிமையில்லா), அவர்களைக் காட்டிலும் குடிப்பிறப்பில் கீழ்பட்டவர்களாக இருந்தாலும், எம்பிரானுக்கு பக்திசெய்யும் அடியவரே... அவனுக்கு உவப்பானவர்கள்! துளசியை எப்படி தலைமேல் வைத்து கொள்வானோ, அப்படி அடியவர்களை உயர்த்தி வைத்துக் கொள்வான் அவன்! குலம் முக்கியமில்லை, பெருமாளிடத்தில் பக்தி உடையவராக இருத்தலே முக்கியம்! (எ.கா) குகன்,சபரி,ஜடாயு ,அனுமன்,சுக்கிரீவன்.

40ம் பாடல்

இந்த உலகத்தில் உள்ள உயிர்கள் எல்லாம் நடுநடுங்கும் படியாகவும், நெருப்பால் சுட்டுக் கொன்றும், பெற்ற பாவத்தை உடையவர்கள் ஆனாலும்... அவர்களுடைய வினையின் பயனை அடைய மாட்டார்கள். ஏனெனில், அவர்கள் திருவாகிய 'பெரிய பிராட்டியையும்' ஸ்ரீ வத்ஷன் ஆகிய மறுவையும், தன் மார்பில் ஏந்திய... 'அரங்கனே' உபாயம் என்று, திட விசுவாசத்தோடு பற்றி இருந்தார்கள் என்றால் வினைப்பயன் களிடமிருந்து விடுபடுவர்(எப்போது அரங்கனை பற்றினோமோ அப்போதே பாவங்கள் அனைத்திலிருந்தும் விடுபடுவோம்).

41 ம் பாடல் 

வானுலார் அறியலாக 

வானத்தில் இருப்பதனால் மட்டும் ஒருவன் பரமபத நாதனை அறிந்து விட முடியாது. நம்முடைய முயற்சி எதுவும் இல்லை என்று இருக்க வேண்டும். சம்சாரக்கடலை கடக்க 'ஸ்ரீமன் நாராயணன்' என்ற ஓடம் பற்ற வேண்டும். அவனே உபாயம் என்றிருக்க வேண்டும். ஞானம், சக்தி, ஆயுள் இவற்றில் எல்லாம் உயர்ந்தவர்களாக இருந்தாலும்... அவனை பற்றாவிட்டால், அவனை அடைய முடியாது. வானவர்கள் அறிய முடியாத வானவா என்றும்...தேனை ஒத்த திருத்துளாயை முடியில் உடையவனே, என்று சொல்வார்களானால் அவர்கள் எப்படிப்பட்ட கீழ்மையான காரியங்கள் செய்தவர்களானலும் தன் பொருட்டு, மற்றவர்களை காரியம் செய்ய வைப்பவர்களாக இருந்தாலும்...(ஊன காரகர்களேனும்) அவர்கள் பெருமாள் அடியவர்கள் ஆகிவிட்டால், 'மெய்ஞானம்' பெற்றுவிடுவர் ... பிறகு இக்காரியங்கள் எதையும் செய்ய மாட்டார். இப் பாவங்கள் அனைத்தையும் முன்னால் செய்திருந்தாலும், அதுவும் அவர்களை விட்டு நீங்கிவிடும். மெய்ஞானம் பெற்றவர்கள் அடுத்தவர் துன்பம் பார்த்து வருந்துவர். அப்படிப்பட்ட பெருமாள் அடியவர்கள் சாப்பிட்டு மிச்சம் வைத்த உணவானது நமக்கு கிடைக்குமானால், அது 'புனிதம்' (போனகம் செய்த சேடம்). பெருமாள் பிரசாதம் புனிதமானது... பரிசுத்தமானது! அடியார்கள் பிரசாதம், மிகுந்த புனிதமானது மிகுந்த பரிசுத்தமானது!

42 ம் பாடல்

இப்பாடலுக்கு மிகுந்த சிறப்பு உண்டு. ஏனெனில், 'பெரிய பெருமாளே' சொன்னதாக அமைந்த பாசுரம்.

"பழுதிலா, ஒழுகல் ஆற்றுப் - பல சதுப்பேதிமார்கள்  

இழிகுலத்தவர்களேலும் - எம் அடியார்கள்,ஆகில்

தொழுமின்" 

குற்றம் குறை இல்லாமல், சீரான ஆற்று நீரைப் போல, பிரம்மா தொடங்கி முனிவர் வம்சத்தில் வந்தவர்களாக இருந்தாலும், எக்குறையும் இல்லாத வேதம் அனைத்தும் கற்றவர்களாக, பிராமணத்துவம் உடையவர்களாக, (சதுப்பேதிமார்கள்) எந்தவித தோஷம் இல்லாத வம்சத்தை உடையவர்களாக இருந்தாலும்....பத்து விதமான சம்மந்தம் நமக்கும் பெருமாளுக்கும் உண்டு இவற்றை அறிந்து அப்படிப்பட்ட சம்பந்தத்தை உணர்ந்து செயல்படும் அடியவர்களாக (விதுரனைப்போல) இருந்தால், மேற் சொன்ன சதுப்பேதிமார்கள் இந்த அடியவர்களை 'தொழ' வேண்டும்!

கொடுமின்- கொன்மின்

உங்களுக்கு தெரிந்த (ஞானம்) விஷயங்களை, அவர்கள் கேட்டால் சொல்ல வேண்டும்- கொடுமின்.ஞானம் பெற்றவர்களாக இருந்தால், அவர்களுக்கு தெரிந்த விஷயங்களை, நாம் கேட்டுப் பெற்றுக்கொள்ள வேண்டும். -கொள்மின்.அப்படிப்பட்ட அடியார்களை, பெருமாளை எப்படி வழிபடுவோமோ அப்படி அவர்களை வழிபட வேண்டும்...ஆழ்வார் அனைவரும் பெரிய குலத்தில் பிறந்தவர்கள் அல்ல. அவர்களை எப்படி கொண்டாடுகிறோமோ அப்படி அடியவர்களை வழிபட வேண்டும். (எ.க) அரங்கன் வாயால் பேச மட்டும் செய்யவில்லை.செயலிலும் நடத்திக் காட்டினான். அதற்குச்சான்றே... திருப்பாணாழ்வார்-லோக சாரங்கமுனி.

43 ம் பாடல் 

நான்கு வேதங்களையும், அந்த வேதத்தின் ஆறு அங்கங்களையும், கற்றவர்களாக இருந்தாலும், அடியார்களின் தலைவராக இருந்தாலும், அவர்கள் எம்பிரானின் அடியார்களைப் (வாயால் செயலால் மனதால்) பாகவத அபச்சாரப் பட்டால்...அவர்களே கீழ் குலத்தவர் ஆவர்.(எ.க) ஒரு சமயம் சுவாமி கூரத்தாழ்வானிடம் பிள்ளை பிள்ளை ஆழ்வான் என்ற சிஷ்யன் இருந்தாராம். பிறப்பால் பிராமணர். மற்ற சிஷ்யர்களை பாகவத அபச்சாரம் செய்து கொண்டிருப்பாராம். இதைக்கண்டு வருந்திய கூரத்தாழ்வான் அவரை திருத்தி பணிகொள்ள முயன்றார். ஒரு சமயம் கொள்ளிடக்கறையில், பிராமணர்கள் தானம் கொடுத்துக் கொண்டிருக்க, பிள்ளை ஆழ்வானும் தானம் கொடுத்துக் கொண்டிருந்தார். கூரத்தாழ்வானும், தானம் கேட்டு, பிள்ளைப் பிள்ளையிடம் நின்றார். 'பெருமாள் அடியவர்களை மனதால், செயலால், வாக்கால் துன்பப்படுத்த மாட்டேன்' என்று வாக்குறுதி வேண்டும். இதுவே நீ எனக்கு அளிக்கும் தானமாகும். அப்படியே ஆகட்டும்... என்றார் பிள்ளை பிள்ளை. 

44 ம் பாடல்

பெண்ணுலாம் சடையினான் -பெண் உலாவும் (கங்கை) சடையை உடையவனுமான சிவன் ஆகட்டும்... பிரம்மன் ஆகட்டும் உன்னை காண்பதற்காக ஊழி ஊழிக்காலம் தவம் செய்தனர்... ஆனால் நீ வரவில்லை... அவர்கள் அனைவரும் வெட்கப்படும்படியாக, அன்று கஜேந்திராழ்வான் (யானை) அழைக்க ஓடோடி வந்தாய்... இப்படி கண்மண் தெரியாமல் உதவி செய்வாய்... மெய்யடியவர்களுக்கு .  அப்படிப்பட்ட உன்னை, அனைவருக்கும் அருள் செய்பவனாக கருதுகிறார்கள்... என்ன விந்தை! கஜேந்திரனாவது ஒரு முதலையிடம் மாட்டிக் கொண்டான்... நாம் ஐம்புலன் என்னும் ஐந்து முதலையிடம் மாட்டிக் கொண்டோம்! அவனைச்சரண் அடைவோம்... அவனைக் காண்பிக்கும் ஆச்சார்யனை சரணடைவோம்... ஸ்ரீ வைஷ்ணவ இலட்சணத்தோடு இருந்து அவன் அருளைப் பெறுவோம்!

45 ம் பாடல்

அழகு மிகுந்த வெண்மையான மாடங்களை உடைய, பெருமை பொருந்திய, 'மதுரா' நகரம் (மதுரா மாநகரத்திற்கு ஏற்றங்கள் பல உண்டு: அவை கண்ணன் பிறந்த இடம்... வாமன அவதாரத்தில், வாமனன் பிறந்து, ஆசிரமம் வைத்து, வாழ்ந்த இடம்...சத்ருகனன், பரதனைக்கு கைங்கரியம் செய்த இடம்...). அப்படிப்பட்ட மதுராவிற்கு கண்ணன் வருகிறான். அவன் பிறந்த போது அலங்காரம் அவ்வளவாக செய்யவில்லையாம்! ஆதலால், ஆழ்வார் சொற்களால் அலங்காரம் செய்கிறார் இப்போது! அப்படி கண்ணனாக வந்து மதம் கொண்ட யானை [ குவளையா பீடத்தை] கொன்ற 'அரங்கமால்' (அடியார்களிடத்தில் மிகுந்த அன்பை உடையவன் பெரிய பெருமாள் அரங்கன்) அதனால் தான், ஆழ்வார் 'கண்ணனை' அரங்கன் என்கிறார்! துளவத் தொண்டாய-துளசியை கொண்டு தினமும் கைங்கரியம் செய்த ஆழ்வார்...(பகவத் கைங்கரியம்). தொண்டரடிப்பொடி ஆழ்வார் இயற்கையாகவே அடியவர்களிடத்தில் கீழ்படிந்தவர்...(தொண்டர்களுடைய திருவடிக்கு தூசி). அவர் சொன்ன"திருமாலை"என்னும் திவ்யப் பிரபந்தம் இசையிலும், கவிதையிலும், குறை இருந்தாலும், (எக்குறையும் இல்லை.. ஆழ்வாரின் நைச்சிய பாவம்) எம்பிரானுக்கு அது இனியதே!

திருமாலை நிறைவடைந்தது...

நமக்கு கிடைத்தது. 

1. ஸ்ரீமன் நாராயணனைச் சரணடைய வேண்டும்.

2 அவன் மேல் பாரத்தை போட வேண்டும்.

 3.அவனிடத்தில் முழுக்க முழுக்க நம்பிக்கை இருக்க வேண்டும்.

 4.அவனே கதி என்றிருக்க வேண்டும். 

5.அவனுக்கு உவப்பானதை மட்டுமே செய்ய வேண்டும்.

6.இவையனைத்தையும் விட மிக முக்கியமானது பாகவத அபச்சாரம் செய்து விடக் கூடாது.


தொண்டரடிப்பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் 

🙇🏻‍♀🙇🏻‍♀🙇🏻‍♀🙇🏻‍♀🙇🏻‍♀🙇🏻‍♀


Comments

Popular posts from this blog

நீராட்டம்

பேரானந்தம்

எம்பெருமாட்டியின் கனா